சரி செய்வதும்… நேர் செய்வதும்!

வணக்கம். உங்களை இந்த வலைத்தளத்திற்கு வருக வருக என வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

இயக்கம் பிறந்த கதை …..

ஜொகூர் மாநிலத் தமிழ்க் கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கம் 27 மார்ச் 2012ஆம் ஆண்டு தோற்றம் கண்டது. கல்வித்துறையைச் சார்ந்த சிலர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சமகால சவால்களையும் நலப்பாடுடைய பல்வேறு தரப்பினரின் அக்கறைகளையும் கருத்தில் கொண்டு ஆசிரியப்பணித்திற மேம்பாட்டிற்கு ஆவன செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை முன் வைத்து ஒரு கருத்தாடல் நடத்தினர். அந்தக் கலந்துரையாடலின் முடிவே இவ்வியக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. எட்டு பேர் பிள்ளையார் சுழிபோட்டுத் தொடங்கிய அவ்வியக்கம் அன்று தொடங்கி மிக அமைதியாக தமிழாசிரியர்களுக்கான முன்னெடுப்புகளைப் பணித்திறன் சார்ந்தும் தனிநபர் திறன் மேம்பாடு சார்ந்தும் செயல்படுத்திக் கொண்டு வருகின்றது.

நடந்து வந்த பாதை…..

பின்னோக்கிப் பார்க்கையில் பத்து ஆண்டுகளைத் தொடும் நமது இயக்கம், இதுகாறும் ஆசிரியர் பணித்திற மேம்பாட்டுப் பயிற்சிகள், பட்டறைகள் முதற்கொண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம் வரை செய்து முடித்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கையில் மலைப்பாக உள்ளது. இவ்வேளையில் ஆதரவு அளித்த உங்கள் அனைவரையும் அன்பு கலந்த நன்றியோடு நினைவுகூருகிறோம்.

நமது நோக்கம்: தடைக்கல்லே படிக்கல்லாக…

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் கல்விக்கழகத்திலிருந்து வெளிவரும் புதிய ஆசிரியர்களும் பள்ளியில் பல்லாண்டுகளாகப் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களும் எதிர்நோக்கும் சவால்கள் பல்வேறானவை; கவனிக்கத்தக்கன; தீர்வுகண்டு ஆசிரியர்களைத் தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டப்பட வேண்டியன.

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி மிக சவால்மிக்க காலகட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. கற்றல் கற்பித்தலில் மாணவர் அடைவு நிலையை மதிப்பீட்டு எண்களை மட்டுமே தராசாகக் கொண்டு முடிவு செய்த காலம் கடந்து மதிப்பீட்டு முறைமையின் தேவையே இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக இருந்த காலம் மாறி இன்று கற்றலுக்கு வழிகாட்டுநராக, வழிநடத்துநராக உருமாறியுள்ளார். தமிழ்மொழியைக் கல்விமொழியாக நிலை பெறச் செய்வதில் சவால்கள் ஒரு புறம்; அசுர வேக கல்வியுலக மாற்றத்தைக் கைக்கொள்வதில் ஏற்படும் சவால்கள் மறுபுறம். இந்த இக்கட்டான சூழலில் ஆசிரியர்கள் வகுப்பறை, பள்ளி, கல்வி இலாகாவழி பெறும் அனுபவ எல்லைகளைத் தாண்டி தங்கள் பணித்திறனுக்கான மேலதிகத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அத்தகைய வாய்ப்புகளை உருவாக்கித் தருவதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

சென்ற X, Y மற்றும் Z தலைமுறை ஆசிரியர்கள், இன்றைய millennials எனப்படும் நூற்றாண்டுத் தலைமுறைக்குக் கல்வி புகட்ட வேண்டுமெனில் அதற்கேற்ற அணுகுமுறை, உத்தி, முறைதிறங்களிலும் தொழில்நுட்பத் திறனிலும் சிறந்து விளங்க வேண்டும். அதையொட்டிய பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதும் இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இக்காலக்கட்டத்தில் மாணவர் உருவாக்கம் என்பது முழுமைபெற்ற மாந்தனை உருவாக்குவது என்பதே. அறிவு, திறன், பண்பு என முத்திறன்களையும் கைவரப்பெற்றாலொழிய உலகளாவிய சவால் மிக்கச் சூழலில் எதிர்நீச்சல் போட ஆற்றல் இன்றி இளைய தலைமுறை மங்கி மறைந்துவிடும் ஆபத்து நாம் அறிந்ததே. நாட்டின் எல்லைகளைக் கடந்து உலகக்குடிமகனாக உருவெடுத்து வென்றெடுக்கும் வல்லமை கொண்ட தலைமுறையே நாளை செழித்து நிற்கும். சுருங்கச் சொன்னால் மிகச் சிறப்பாக செயல்படும் ஒரு தலைமுறையை உருவாக்கும் சவால்மிக்கப் பணி இன்று ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கையறு நிலை நாம் அறிந்ததே. இது ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சி. தனியொரு இயக்கம் இதைச் செயல்படுத்துவது கடினம். இதைக் கருத்தில் கொண்டே ஒத்த நோக்கமுடைய அமைப்புகளுடனும் தனியாளுடனும் இசைவாக்கத்துடன் உடனிணைந்து செயல்படுவது நமது அடுத்த நோக்கமாக உள்ளது.

சராசரி கல்வி அறிவுள்ள பெற்றோர் கூட இன்று ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உரசிப் பார்ப்பதும் அவர்களைத் கருத்துதிர்ப்பு எனும் தராசில் வைத்து மதிப்பிடுவதோடு சமூக ஊடகங்களில் பாடாய்ப்படுத்துவதும் வழமையாகிவிட்டது. சிக்கல் இருபாலரிடத்தும் உண்டு. இருப்பினும் எல்லாத் தரப்பினரும் தமது எதிர்பார்ப்புகளை ஆசிரியர்களின் தோள்களில் ஏற்றி இருப்பது அவர்களை மேலும் இக்கட்டானச் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது. ஆசிரியர்களிடையே பன்முகத் திறனை வளர்க்க வேண்டும் என்ற உந்துதலில் அவர்களுக்கான தனி நபர் திறன் மேம்பாடு, வகுப்பறை மேலாண்மை, சிறந்த கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள், உத்திகள், வகுப்பறை சார்ந்த ஆய்வு, பணித்திற கற்றல் குழுமம் உருவாக்கம் எனப் பல முனைகளில் செயல்பட இயக்கம் ஆவன செய்து கொண்டு வருகிறது என்பதை தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கிறோம். தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும் திறன்களை வளர்த்தெடுக்கவும் தயாராக உள்ள ஆசிரியர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும் நம் இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

ஆசிரியர்களுக்குப் பயன்படும் வகையிலும் அதேவேளையில் அவர்களிடையே சமகாலச் சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன்களை உருவாக்க வேண்டும் என்ற வகையிலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இயங்கலை வழி வாராந்திரத் திறன் மேம்பாட்டுத் தொடர்வுரை, கருத்தரங்கம், பகிர்வரங்கம், பயிற்சிப்பட்டறைகள் எனப் பல நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டும் தொடர் திட்டங்கள் வரையப்பட்டும் வருகின்றன.

இதுவரை இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள்; நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பான வரவேற்பை ஆசிரியர்கள் மத்தியில் பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய ஊக்கமூட்டும் செய்தியாகும். இது நாங்கள் சரியான தடத்தில்தான் பயணிக்கிறோம் என்ற நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது.

நன்றி மறப்பது நன்றன்று. நாம் நேரடியாக இங்கே நம் சிந்தனைச் சிதறல்களையும் கருத்துதிர்ப்புகளையும் வழித்தடத்தையும் பதிவுசெய்யும் வண்ணம் வலைத்தளத்தை உருவாக்கியும் இயங்கலை வழி சிறப்பாகச் செயல்படவும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு ஆக்ககரமான ஆலோசனைகள் பல நல்கியும் இலக்கு நோக்கி நகர என்றும் ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் அருமை நண்பர், தமிழ்கூறு நல்லுலகிற்கு அஞ்சல்முரசு எனும் அழகான எழுத்துரு வடிவங்களை ஆக்கிக்கொடுத்தவரும் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான ஐயா திரு முத்து நெடுமாறன் அவர்களுக்கு, இவ்வேளையில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ்மொழி ஆசிரியர்களை உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்களாகவும் கற்றல் கற்பித்தலில் திறமை பெற்றவர்களாகவும் உருவாக்குவதே நமது இலக்கு, கனவு எல்லாம். இக்கனவு மெய்ப்பட இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவைத் தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நம்புகிறோம். எங்களுடன் தொடர்ந்து உடனிணைந்து பயணிக்க வேண்டுமாய் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எல்லோருக்கும் வாழ்த்துகள்.

இறையருள் சித்திக்குமாக!